Skip to main content

மார்க்சிஸ்ட் மாநிலக்குழுக்கூட்டம் - 5 முக்கிய தீர்மானக்கள் நிறைவேற்றம்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
bala

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மே 2-3 தேதிகளில் மதுரையில், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இன்றைய (03.05.2018) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

 

தீர்மானம்: 1
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்
மத்திய அரசு மீண்டும் துரோகம்

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மீண்டும் மத்திய அரசு வரைவு நகல் திட்டத்தை சமர்ப்பிக்காமல் மேலும் அவகாசம் கேட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. மேலும் இதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணம் மிகவும் கொச்சைப்படுவத்துவதாக உள்ளது. அதாவது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களது ஒப்புதலை பெற முடியாததால் வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவித்திருப்பாதனது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.  ஆகவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து செயல்படுத்த முன்வராது என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு இழைத்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்டமாக இது உள்ளது.

எனவே மத்திய அரசின் இத்தகைய தமிழக விரோதப் போக்கினை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென கட்சி அணிகளையும், பொதுமக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 

 

தீர்மானம்: 2
ஜூன் 12ல் மேட்டூர் அணையை 
திறக்கும் வகையில்
மத்திய அரசு கர்நாடகா அரசை 
நிர்ப்பந்திக்க வேண்டும்

காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று போக சாகுபடி இரண்டு போகமாக மாறி தற்போது ஒரு போகமாகி தற்போது இந்த ஒரு போக சாகுபடியும் நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படாததே இந்த நிலைமைக்கு காரணம். மழையை நம்பித்தான் இனி டெல்டா மாவட்ட விவசாயம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமையில் மத்திய மோடி அரசு தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தின் நலனுக்கு துரோகம் இழைத்து வருகிறது. வருகின்ற ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறந்திட வேண்டுமென்றால் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு வழங்கிட வேண்டிய தண்ணீரை திறந்துவிட வேண்டும்.  கர்நாடக அரசு தண்ணீர் தருவதை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் மத்திய அரசு, கர்நாடக அரசை நிர்ப்பந்தித்து காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிட வற்புறுத்திட வேண்டும். தமிழக அரசும் வேடிக்கை பார்க்காமல் மத்திய அரசை நிர்ப்பந்தித்து ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறந்திடும் வகையில் கர்நாடக அரசிடம் தண்ணீரை பெற்றிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டுமென  மத்திய அரசையும்,  மாநில அரசுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 


தீர்மானம்: 3
தனியார் நிறுவன கல்வி கட்டணக்
கொள்ளையை தடுத்து நிறுத்துக!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை மிக அதிகமாக நடைபெற்று வருகிறது. அதாவது ஏப்ரல் மாதம் மத்திய பாடத்திட்டத்தில் நடக்கும் கல்வி நிலையங்களுக்கும், மே மாதத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடக்கும் கல்வி நிலையங்களுக்கும் சேர்க்கை நடைபெற வேண்டுமென தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சேர்க்கையை முடித்து விட்டனர். முன்கூட்டியே சேர்க்கை நடத்துவதற்கு காரணம் மிகப் பெரிய கட்டணக் கொள்ளையை அடிப்பதற்கே. இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் போக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசாங்கம் கடந்த 2014-2015 ல் நீதியரசர் சிங்காரவேலு தலைமையிலான குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தையே இன்னும் மாற்றியமைக்காமல் உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் போடப்பட நீதியரசர் டி.வி.மாசிலாமணி குழு இன்று வரை மூன்றில் ஒருபங்கு தனியார் கல்வி நிலையங்களுக்கே கட்டண நிர்ணயம் செய்துள்ளது. முறையாக குழு கூடாததின் விளைவே இன்னும் ஆறாயிரம் பள்ளிகள் வரை கட்டணம் நிர்ணயம் செய்யாததற்கு முக்கியக் காரணமாகும். எனவே தான் தமிழக முழுவதிலுமுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் ரூ 5,000 முதல் 1,00,000 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது படித்துவரும் மாணவர்களிடமும் முன்னதாகவே கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்டது. 
வசூல் செய்யப்படும் கல்விக் கட்டணத்திற்கு முறையான இரசீது தரப்படுவதில்லை. துண்டுசீட்டில் எழுதி கொடுக்கப்படுகிறது. ஒரு பள்ளியில் சேர்க்கை முடிந்து சேர்ந்த பின் வேறு பள்ளிக்கு சேர விரும்பினால் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதில்லை. மேலும் கட்டிய தொகையில் சரிபாதி கொடுத்தால்தான் ஆவணங்களை திருப்பிக் கொடுக்கின்ற அவலமும் இருக்கிறது. இன்னும் பல பள்ளிகள் கட்டண கொள்ளை அடிப்பதற்காகவே மாநில பாடத் திட்டத்திலிருந்து, மத்திய பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் பெற்றுள்ளனர். தனியார் முதலாளிகளிடம் பெரும் தொகையை கையூட்டாக ஆளும் கட்சியினர் பெறுவதால் இந்த கல்விக்கட்டண கொள்ளையை கண்டு கொள்வதில்லை. 
எனவே தமிழக அரசாங்கம் கல்விக் கட்டண நிர்ணயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மாசிலாமணி கமிட்டியை துரிதமாக கட்டண நிர்ணயம் செய்து கட்டணக் கொள்ளை நடைபெற்ற இடங்களில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை மாணவர்களிடம் திருப்பி கொடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் - 4:
இளம் தளிர்களை - குடும்பங்களை சீரழிக்கும் மதுக்கடைகளை அப்புறப்படுத்துக
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, குருக்கள்பட்டி வருவாய் கிராமத்தைச் சேர்ந்த கே.ரெட்டியபட்டி எனும் சிற்றூரைச் சேர்ந்த தினேஷ் என்கின்ற 17 வயது மாணவனின் மரணம் அரசுக்கும், சமூகத்திற்கும் வலுவான ஒரு செய்தியினை விடுத்துள்ளது. 9 வருடங்களுக்கு முன்பு அம்மாவை இழந்த தினேஷ் குடிப்பழக்கத்தின் காரணமாக அப்பாவின் பாசத்தை, அரவணைப்பை இழந்தது தாங்கமுடியாத ஏக்கம் தற்கொலைக்கு தள்ளியது. மாமாவின் உதவியோடு 12ம் வகுப்பை முடித்துள்ள தினேஷ் சென்னையில் டீக்கடையில் வேலை செய்து கொண்டு வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்து வந்துள்ளார். அவரது டைரியில் தினேஷ், எம்.பி.பி.எஸ்., எம்.டி. என எழுதி பார்த்து தனது கனவுகளை நோக்கி நகர்ந்துள்ளார்.
மே 6ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். குடிப்பழக்கம் உள்ள தந்தையின் சித்ரவதையால் எதிர்பாராத வகையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்த போதிலும், ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடியபோதிலும், தமிழக அரசு மக்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதோடு, எதிர்ப்பு இருக்கும் இடங்களிலும் கடைகளை திறந்து வருகிறது. ஏழைக்குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துகிறது. மதுவிற்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையின் மூலம் ஒடுக்குகிறது.  தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. 
எனவே மதுக்கடைகளை படிப்படியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம்:5
மாற்றுத்திறனாளிகள் புதிய சட்டத்திற்கு
விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்திடுக

ஊனமுற்றோர் உரிமைகளுக்கான 2007 ஆம் ஆண்டு ஐ.நா. கன்வென்ஷன் உடன்படிக்கையை இந்திய அரசு 7-வது நாடாக கையொப்பமிட்டு ஏற்றதோடு மத்திய அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம்(ரேட்டிபை) செய்தது.   இந்த கன்வென்ஷன் விதிகளின் அடிப்படையில் மத்திய அரசு புதிய உரிமைகள் சட்டத்தை இயற்ற வேண்டுமென மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக போராடி வந்த பின்னணியில் 2016 டிசம்பரில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது.

மாநிலங்களில் இச்சட்டத்தை அமல்படுத்த 6 மாதங்களுக்குள்  விதிமுறைகளை உருவாக்கி அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்பது இச்சட்டத்தின் விதியாகும்,  ஆனால், பெயரளவிற்கு  விதிமுறைகளுக்கான நகல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு தமிழக அரசு  அதன் மீது கருத்துக் கேட்டதே தவிர, சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டத்திற்கான விதிமுறைகளை முறையாக அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்த தமிழக அரசு மறுத்து சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது,  சென்னை உயர்நீதிமன்றமும்  தமிழக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக விதிமுறைகளை வெளியிட இரண்டு மாதங்களுக்கு முன் உத்தரவிட்டுள்ளது,

ஆனால், தமிழக அரசு சட்டத்தையும் மதிக்காமல், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை காலில் போட்டு மிதித்து வருகிறது.  இது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.  தமிழக அரசின் இச்செயலால், சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சிறப்பு இட ஒதுக்கீடுகள், சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் தமிழகத்தில் முழுமையாக அமலாகாமல் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டத்திற்கான விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டு இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வற்புறுத்துகிறது.

அதேபோல 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள மனநல பாதுகாப்புச் சட்டத்திற்கான விதிமுறைகளையும் தமிழக அரசு உருவாக்கி காலம் தாழ்த்தாமல் நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.’’


 

சார்ந்த செய்திகள்