தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.
மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.