மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள சி.ஐ.டி.யு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "என்.எல்.சி. நவரத்னா அந்தஸ்தைப் பெற்று மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்குகிறது. லாபம் ஈட்டக்கூடிய இந்நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிறுவனம் பூர்த்தி செய்வதில்லை. மாறாக அந்தப் பணிகளை கான்ராக்ட் விடும் மோசமான நடவடிக்கைகளில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கையின் விளைவாகத்தான் இவ்வாறு செய்கிறார்கள்.
சமீபத்தில் என்.எல்.சி. நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பணி நியமனத்திற்கான தேர்வு நடைபெற்றுள்ளது. 259 பணிகளைப் பூர்த்தி செய்ய எழுத்துத் தேர்வு நடந்து, இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். கடைசியாக நேர்காணலுக்கு 1,500 பேரைத் தேர்வு செய்துள்ளனர். இதில், 8 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்தத் தேர்வு எந்த அடிப்படையில் நடைபெற்றது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்தத் தேர்வுகளில் மிகப்பெரிய அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் கடலூர் மாவட்ட இளைஞர்களும், தமிழக பொதுமக்களும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெய்வேலி நிறுவனம் வித்தியாசமான நிறுவனம். இந்த நிறுவனம் உருவாவதற்கான பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்தப் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வழங்கி இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் நிலக்கரி இருப்பதனால்தான் நெய்வேலி நிறுவனமே இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றி தான் நிலக்கரி எடுக்கிறார்கள். இதனால், மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரிய அளவிற்குக் குறைந்துள்ளது. குடிநீருக்கு கூட மக்கள் அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுகிறபோது ஏன் கடலூர் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் வேலைவாய்ப்பை வழங்கக் கூடாது.
வேறு இடங்களில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை என்பது வேறு, இந்த நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 1500 பேரில் வெறும் 8 பேர் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மிகப்பெரிய கொந்தளிப்பு கடலூர் மாவட்டத்தில் உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பும். என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மற்றவர்களோடு இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். நிறுவனம் இதுகுறித்து தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீத வேலை வாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளித்துவிட்டு பின்னர் நேர்காணல் நடத்த வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.