Skip to main content

காவிரி மேலாண்மை வாரியமே நிரந்தர தீர்வு! மார்க்சிஸ்ட்

Published on 02/04/2018 | Edited on 02/04/2018
Marxist Communist


 

காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதே நிரந்தர தீர்வு. இதை உறுதிப்படுத்த தமிழகமே ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி பிரச்சனையில் உரிய அதிகாரங்களை கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதே நிரந்தர தீர்வாக அமையும். இதை உறுதிப்படுத்த தமிழகமே ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம்

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா “உச்சநீதிமன்றம் வெளியிட்ட காவிரி தீர்ப்பில் செயல்திட்டம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடப்படவில்லை. காவிரி பிரச்சனையை முழுமையாக தீர்ப்பதற்கு உரிய திட்டத்தை ஸ்கீம் என்று குறிப்பிட்டோம்” எனக் கூறியுள்ளார். அதாவது ஸ்கீம் என்பதையும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதையும் வேறுபடுத்தி அவர் கருத்து தெரிவித்துள்ளது விசித்திரமாக உள்ளது. 
 

காவிரியில் தமிழகத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தண்ணீர் கிடைப்பதற்கு உரிய அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான அனைத்து செயல்திட்டங்களையும் நடுவர் மன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றம்  இதை ஏற்றுக் கொள்வதாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது பலவிதமான சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. 

எனவே, நடுவர் மன்றம் தெளிவாக குறிப்பிட்ட உரிய அதிகாரங்களை கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்பதற்கான அனைத்து வாதங்களையும்  உச்சநீதிமன்றத்தின் முன் வற்புறுத்தி சாதகமான தீர்ப்பினை பெற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
 

தமிழகத்தின் உயிர் நாடியான காவிரி பிரச்சனையில் உரிய அதிகாரங்களை கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதே நிரந்தர தீர்வாக அமையும். இதை உறுதிப்படுத்த தமிழகமே ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்