Skip to main content

மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அரசு கையகப்படுத்த திட்டமா ? கொதிக்கும் இந்து அமைப்புகள்

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 


தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்  பிரபலமானது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுவை என தென்னிந்தியா முழுவதும் ஆதிபராசக்திக்கு பக்தர்கள் உண்டு.

 

m


சென்னை – திருச்சி தேசிய நாற்கர சாலையில் சின்னஞ்சிறு கோயிலாக 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது இக்கோயில். அங்கு குறி சொல்லிக்கொண்டு இருந்தவர் பங்காரு என்பவர். கோயிலுக்குள் உள்ள ஆதிபராசக்தி என்கிற பெயருடைய அம்மனுக்கு பெண்களே கருவறைக்குள் சென்று பூஜை, ஆராதனை செய்யலாம் என்பதே பெண்களை அலை அலையாய் மருவத்தூரில் குவிய வைத்தது. அந்த கோயிலை உருவாக்கிய பங்காரு என்பவர் பங்காருஅடிகளார் என பெயரை மாற்றிக்கொண்டார். பக்தர்கள் அவரை அடிகளார் என அழைத்தனர். தென்னிந்தியா முழுவதும் ஆதிபராசக்தி பீடங்கள் என்கிற பெயரில் மன்றங்கள் வைக்கப்பட்டுள்ளன.


பெரும் பக்தி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார் பங்காரு அடிகளார். இவருக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது மத்திய பாஜக அரசு. பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி என்கிற பெயரில் பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரி, மருத்துவக்கல்லூரி, நர்சிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், நர்சரி பள்ளிகள் என பல தொழில்களை நடத்தி வருகிறார். அரசியல் செல்வாக்கும் பெற்றவர்.


இந்த ஆதிபராசக்தி கோயில் உட்பட காஞ்சிபுரம், திருவள்ளுவர், வேலூர் மாவட்டங்களில் உள்ள கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகின்றன. தனியார் நிர்வகிக்கும் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் தலையிட முடியாது என்றாலும், பொதுமக்கள் வரும் இடம் என்பதால் கோயிலை சரியாக பராமரிக்கிறார்களா, பக்தர்களுக்கான வசதிகள் உள்ளதா, உண்டியல் வைத்து வசூல் செய்கிறார்களா என கண்காணிக்கும், ஆய்வு செய்யும் அதிகாரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு.

 

m


அதன்படி இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ஆய்வு நடைபெற்றுவருகிறது. அதன்படி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு நடத்தியுள்ளனர் அதிகாரிகள். வழக்கமாக நடைபெறும் இந்த ஆய்வை தற்போது சர்ச்சையாக்கியுள்ளார்கள் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள்.


மருவத்தூர் கோயிலை அரசாங்கம் எடுத்துக்கொள்ள நினைக்கிறது, நோட்டீஸ் அனுப்பி யுள்ளது, அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள் என கொதித்துப்போய் அறிக்கையெல்லாம் விடத்துவங்கியுள்ளார்கள்.


இது தொடர்பாக வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரியை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, அந்த கோயில் நிர்வாகத்தில் நாங்கள் தலையிடவில்லை. அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பன உட்பட சில ஆய்வுகள் வருடந்தோறும் நடத்தி அறிக்கை அரசுக்கு அனுப்புவோம். அந்த ஆய்வைத் தான் செய்தோம், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 3 மாவட்டங்களில் நடத்திவருகிறோம். மற்றபடி கோயிலை கையகப்படுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை என்றார்.

 

சார்ந்த செய்திகள்