தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 - 2007 காலக்கட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அப்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் தொலைக்கட்சிக்கு பி.எஸ்.என்.எல் அதிவேக தொலைபேசி இணைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், அவரது சகோதர் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொதுமேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீசியன் ரவி உள்பட 7 பேரை விடுவித்து கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிபிஐ சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது, அதில் சிபிஐ தரப்பு கோரிக்கை ஏற்கப்பட்டது. 7 பேர் விடுவிக்கப்பட்டது செல்லாது எனவும் மீண்டும் சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு பதிவை மீண்டும் தொடங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.