சமய ரீதியான ஆன்மிக விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விழாக்கள் என்றால் ஒலிபெருக்கிகள் தவறாமல் இடம்பெறும். முன்பெல்லாம் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளே பயன்பாட்டில் இருந்தன. ஒலி மாசு ஏற்படுத்துவதாக பொதுநல வழக்கு தொடரப்பட, கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை இனி பயன்படுத்தக்கூடாதென 2005-ல் தடை விதித்தது உயர் நீதிமன்றம்.
அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் ‘கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி மாசு ஏற்படுத்தும் கட்டடங்களின் மின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டிருந்தனர். ஸ்பீக்கர்கள் பயன்படுத்தினாலும், அனுமதிக்கப்பட்ட டெசிபலுக்கு அதிகமாக அலறவிட்டால் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் இன்னும் பழைய கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதும், அனுமதிக்கப்பட்ட டெசிபலுக்கு அதிகமாக ஒலி எழுப்புவதும் தொடரவே செய்கிறது. பொதுவாக, மத ரீதியான விழாக்களில் இந்த விதி மீறல் நடப்பதால் பொதுமக்கள் தரப்பில் புகாரளிப்பதும் இல்லை; காவல்துறை நடவடிக்கை எடுப்பதுமில்லை.
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் என்ன விளைவை ஏற்படுத்துமென்றால், காதின் கேட்கும் திறனைப் பாதிக்கும். வெகுதூரம் ஒலிக்கும் சத்தம் இதய நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும். சிவகாசி – விஸ்வநத்தம் – காகா காலனியில் உள்ள கௌமாரியம்மன் கோவில் அருகில் ராஜ் என்பவர், தனக்குச் சொந்தமான கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து சென்ற சிவகாசி டவுன் சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி, அவரை கைது செய்து ஒலிபெருக்கியைப் பறிமுதல் செய்தார். ஒலி மாசு ஏற்படுத்துபவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.