நெல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க தாசில்தார் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கு அவரிடம் ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று அதிகாரிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழக முதல்வர் அவர்களே வருவாய்த் துறையில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்கள். எதற்கெடுத்தாலும் லஞ்சம்; லஞ்சம் இல்லாமல் தாசில்தார் அலுவலகத்திற்குள் கால் வைக்கவே முடியாது. அவ்வளவு லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பட்டாவில் சிறிய மாறுதல் செய்ய 50 ஆயிரம் கொடு, ஒரு லட்சம் கொடுன்னு கசக்கி பிழிகிறார்கள்.
நான் ஒரு கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாற்றித் தருகிறோம் என்கின்றனர். நான் பணம் எல்லாம் தரமாட்டேன்; என்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது என்று கேட்டதற்கு, நீ எங்க வேண்டுமானாலும் செல் என்கிறனர்.
இது தொடர்பாக ஏகப்பட்ட மனு கொடுத்து, ஒரு வருடமா நடையா நடந்துகிட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த மனுவுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரூ.1 லட்சம் லஞ்சமாகக் கொடுத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருப்பார்கள். தயவு செய்து லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; லஞ்சம் கொடுத்தால்தான் இது முடியும் என்று கூறிவிட்டீர்கள் என்றால், நான் லஞ்சம் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன். ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தால் தவறு என்கிறீர்கள். ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வேலையே நடைபெறுவதில்லை.
முதல்வரே தயவு செய்து பதிவுத்துறை அல்லது வருவாய்த்துறை இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வையுங்கள்; எங்களால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. கடன்வாங்கி இடத்தை வாங்குனா, இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளமுடியவில்லை. லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; இல்லையென்றால் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என மன வேதனையில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.