Skip to main content

நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு... கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Malpractice in the provision of jewelry; Co-operative union secretary fired

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டுவருகிறது. இந்தச் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செக்காரப்பட்டியில் கடன் சேவை மையம் இயங்கிவருகிறது. 

 

இந்த மையத்தில் தர்மபுரி மாவட்டம், பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பெயரில் 187 பவுன் நகைகள் அடமானம் வைத்து 41 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து செக்காரப்பட்டி கடன் சேவை மையத்தின் கணக்காளர் கார்த்திகேயன் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 

 

இதையடுத்து அந்த சங்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட நகை அடமானக் கடன்களை ஆய்வு செய்ததில், காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 2 பேருக்கு விதிகளை மீறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டது தெரியவந்தது. கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக நகைக்கடன் வழங்கியதாக சங்கச் செயலாளர் மணிராஜை பணியிடை நீக்கம் செய்து, சங்கத் தலைவர் சுந்தரராஜன் உத்தரவிட்டார். 

 

இது ஒருபுறம் இருக்க, செயில் ரீப்ராக்டரி நிறுவன பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திலும் ஒருவருக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த சங்கத்தில் நகைக்கடன் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

 

இதுபற்றி கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கூட்டுறவு சங்கங்களில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் வழங்கக்கூடாது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியின்போது நகைக்கடன்கள் வழங்கியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சில சங்கங்களில் போலி நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடந்துவருகிறது'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்