சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தருமாறு ரஜினிகாந்திடமும் கேட்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தருமாறு ரஜினிகாந்திடமும் கேட்பேன். ரஜினியின் நலன் விரும்புபவர்களில் நானும் ஒருவன்; நண்பர் என்பதால் ஆதரவு கோருவேன். சென்னை சென்றதும் ரஜினியைச் சந்தித்து பேசுவேன். ரஜினியின் முடிவு பா.ஜ.க.வுக்கு ஏமாற்றமா என்ற யூகமான கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது. ஆன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது.
ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளுமாறு யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது, திராவிடத்தை இரு கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்தது தவறு. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா காலத்தில் இருந்து திராவிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் போராட்டம் தொடர்பான பாராமுகம் சரியான அணுகுமுறை இல்லை. எனது தேர்தல் அறிக்கை மக்களை மையப்படுத்தியதாக இருக்கும். என் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன்; நேர்மையான அரசியலில் ஈடுபட்டேன் என்ற வாசகம் எனது கல்லறையில் இருந்தால் போதும்" என்று கூறினார்.