மகாத்மா காந்தியின் 153- வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று (02/10/2021) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் காந்தியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசை பாடல் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02/10/2021) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அகிம்சை- சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்!
தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்! சகோதரத்துவத்தை வளர்ப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.