Skip to main content

செல்ஃபோன் இல்லாததால் தற்கொலை... மாணவி சடலம் எரிந்த தகனமேடையில் குதித்த வாலிபர்? போலீசார் விசாரணை

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

ddd

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது மேட்டுநன்னாவரம் கிராமம். விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பனிரெண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். 


ஏழை விவசாயியான ஆறுமுகம் ரூபாய் 20 ஆயிரம் செலவில் ஒரு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்து, 3 மகள்களும் ஒரே செல்போனில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் சகோதரிகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் வகுப்பு நடத்தப்படுவதால் ஒருவர் மட்டுமே ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயிலமுடியும். மற்ற 2 பேரும் கல்வி பயில முடியாத நிலையில் தங்களுக்கும் தனித்தனியே ஆண்ட்ராய்டு செல்ஃபோன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஆறுமுகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

ஆனால் ஆறுமுகம் மேலும் இரண்டு ஆண்ட்ராய்டு செல்ஃபோன் வாங்க முடியாத நிலையில் மூத்த மகளுக்கும், இரண்டாவது மகளுக்கும் குடும்ப நிலைமையைச் சொல்லி அறிவுரை கூறி அனுசரித்து செல்லுமாறும், மூன்று பேரும் ஒரே செல்ஃபோன் மூலமாக ஆன்லைன் படிப்பு படிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த நித்யஸ்ரீ 29ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார்.

 

வயலில் வேலை செய்துவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த ஆறுமுகம் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்த இரு சகோதரிகளும் நித்யஸ்ரீயை நேரில் பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தைதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் உள்ள உறவினர்கள் உதவியோடு நித்யஸ்ரீயை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் சாலையில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்யஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

அங்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நித்யஸ்ரீ திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

 

இந்நிலையில் நித்யஸ்ரீயின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் அந்தத் தீயில் பாய்ந்து விழுந்து எரிந்து போனதாக தற்போது ஒரு பெரும் பரபரப்புத் தகவல் சூறாவளியாக சுற்றிச் சுழன்று பரவி வருகிறது. 

 

Ad

 

அதுகுறித்து நாம் விசாரித்தபோது, திருநாவலூர் காவல்நிலையத்தின் அருகில் உள்ள மேட்டாத்தூரைச் சேர்ந்த முருகன், திருநாவலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் 20 வயது ராமு ஐ.டி.ஐ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததாகவும், கடந்த 31ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. மேலும், ராமுவின் நண்பர்களிடம் விசாரித்தபோது நன்னாவரம்  நித்யஸ்ரீ சடலம் எரிந்து கொண்டிருந்த போது, அந்தச் சுடுகாடு பகுதிக்குச் சென்று இரவு நேரத்தில் சுற்றிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனவே தனது மகன் எரிந்துகொண்டிருந்த நித்யஸ்ரீயின் சடலத்துடத்துடன் சேர்ந்து தீயில் கருகினாரா? என் மகன் என்ன ஆனார் என்பது குறித்து சந்தேகம் உள்ளதாகவும், அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார் முருகன். 

 

5555

 

இதையடுத்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜயகுமார், மாவட்ட தடய அறிவியல் நிபுணர் ராஜி, திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் நித்யஸ்ரீயின் சடலம் எரிக்கப்பட்ட சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த சாம்பலை பார்த்தனர். அதில் கருகிய நிலையில் ஒரு வாட்ச் மற்றும் செல்ஃபோன் உதிரிபாகங்கள் கிடந்துள்ளன. அதைக் கைப்பற்றிய போலீசார் மேலும் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் கிடந்த எலும்புகளை தடய அறிவியல் நிபுணர் ராஜி ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளார். 

 

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, நித்யஸ்ரீயின் சடலம் எரிந்து கொண்டிருந்த போது ஒரு வாலிபர் திடீரென தீயில் விழுந்ததாகவும், அங்கு எரியூட்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இதைப் பார்த்து அலறியடித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் காணாமல் போன மேட்டத்தூர் முருகன் என்பவரின் மகன் ராமு என்பவர் இந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததை பார்த்ததாகவும் எங்கள் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நித்யஸ்ரீ எரியூட்டப்பட்ட சாம்பலிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் ஆய்வு முடிவுக்குப் பிறகு தீயில் கருகியது ஒருவரா அல்லது இருவரா என்பது தெரியவரும் என்று கூறுகின்றனர்.

 

நித்யஸ்ரீயை ராமு ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவர் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்த ராமு, நித்யஸ்ரீ எரிந்து கொண்டிருந்த தீயில் வந்து விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர் அவரது நண்பர்கள் சிலர். ஆனால் நித்யஸ்ரீக்கும் ராமுக்கும் நேரடியாக எந்தச் சந்திப்பும், தொடர்பும் இல்லை என்றும், மேலும் நித்யஸ்ரீ நன்னாவரம் கிராமத்தில் படித்து வந்துள்ளார், ராமு களமருதூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருவரது ஊர்களுக்கும் இடையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

 

அவர்களுக்குள் காதல் ஏற்படவும் வாய்ப்பில்லை ஆனால் நித்யஸ்ரீ இறந்தது தொடர்பாக அவரது படம் போட்டு ஒட்டப்பட்ட போஸ்டரை ராமு பார்த்துவிட்டு இவ்வளவு அழகான பெண் தற்கொலை செய்துகொண்டாளே என தனது நண்பர்களிடம் கூறி அழுது கொண்டிருந்ததாக ராமுவின் நண்பர்கள் கூறியுள்ளனர். சுடுகாட்டில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வாட்ச் செல்ஃபோன் உதிரிப் பாகங்கள் என்னுடைய மகனுடையதுதான். மேலும் எனது மகனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை வீட்டில் நாங்கள் ஏதாவது சண்டை போட்டாலும் காலையில் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்துவிடுவார். அப்படிப்பட்டவர் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. அவன் தீயில் கருகினானா அல்லது வேறு எங்காவது தலைமறைவாகி விட்டாரா என்பதும் தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று ராமுவின் தந்தை முருகன் கூறியுள்ளார். 

 

Nakkheeran

 

இது விசித்திர சம்பவமாக உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர். உண்மை நிலை என்ன என்பது தடய அறிவியல் துறை உறுதிப்படுத்திய பிறகே தெரியவரும் என்கிறார்கள் காவல்துறையினர். நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட தீயில் ராமு விழுந்து எரிந்து போனதாகக் கூறப்படும் சுடுகாட்டை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்துள்ளார். இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்த ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்