
மதுரை மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கோடை கால பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக இந்த பள்ளி அறிவித்துள்ளது. அதன்படி, ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளனர். அந்த வகையில், ஒத்தக்கடை என்ற பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற 3 வயது பெண் குழந்தை பயின்று வந்தது. இந்த குழந்தை, பள்ளிக்குப் பின்புறம் இன்று விளையாடிக் கொண்டிருந்த போது, அங்குள்ள 15 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பள்ளி உரிமையாளர் திவ்யாவை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பள்ளியில் வேலை பார்த்து வந்த 6 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உதவியாளர் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவல் ஆணையர் அனிதா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஷாலின் உள்ளிட்டோர், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சீல் வைத்தனர். தனியார் பள்ளியில் குழந்தை ஒன்று நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அனுமதியின்றி கோடை கால பயிற்சி வகுப்பு நடத்தக் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கோடைகால விடுமுறை நாள்களில் கண்டிப்பான முறையில் செயல்படக் கூடாது. கோடை கால விடுமுறை நாள்களில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் மாலை நேர வகுப்புகள் உள்பட எவ்வித நிகழ்வில் பேரிலும் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.