
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் நல்லகிந்தனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி மகன் சாரதி (19). பச்சூர் அடுத்த மலரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகள் பிரியதர்ஷினி(19). இருவரும் ஒன்றாக பள்ளியில் படித்து வந்த போது நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அவர்களின் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வந்த இருவரும் கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள குண்டி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே பெண்ணைக் காணவில்லை என அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் பெண் எங்குத் தேடியும் கிடைக்காததால் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் திருமணம் செய்துகொண்டு காதல் ஜோடி இருவரும் இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பிரியதர்ஷினி தன்னுடைய காதல் கணவன் சாரதியுடன் செல்வதாக கூறியதன் பேரில் அவரை சாரதியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். அதே சமயம் பெண்ணின் குடும்பத்தார் இளைஞருக்கோ, பெண்ணுக்கோ எந்த வித தொந்தரவோ அல்லது மிரட்டலோ விடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.