Skip to main content

காதலர் தினத்தை கொண்டாட ஆட்டை திருடிய இளைஞர்கள் கைது

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

lovers day celebrate two friends incident in villupuram

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ரேணுகா. இவர் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஆடுகளை அடைப்பதற்காக அப்பகுதியில் கொட்டகை அமைத்துள்ளார். பகலில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை இரவில் அந்த கொட்டகையில் அடைத்து விடுவார். இந்நிலையில், காலை ஆறு மணி அளவில் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. சந்தேகம் அடைந்த ரேணுகா அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் ஒரு ஆட்டை தூக்கிக் கொண்டு தாங்கள் வந்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகா திருடன் திருடன் என்று கத்திக் கூச்சலிட்டுள்ளார். இவரது கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.

 

அப்போது அவர்கள் வாலிபர்களைச் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதற்குள் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் கண்டாச்சிபுரம் ரோந்து பணியில் இருந்த போலீசார் வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளனர். பொதுமக்கள் நடந்த விவரத்தை போலீசாரிடம் கூறியுள்ளனர். போலீசார் ஆடு திருடர்களை துரத்திச் சென்று வளைத்துப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில், செஞ்சி பகுதியில் உள்ள பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது 20). இவர் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொருவர் கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மோகன் (வயது 20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார் எனத் தெரியவந்தது.  நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். "காதலர் தினத்தன்று காதலியுடன் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக பணத்தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, இருவரும் சேர்ந்து ஆடுகளைத் திருடி சந்தையில் விற்று விட்டு அந்தப் பணத்தில் காதலிகளுடன் ஜாலியாக ஊர் சுற்ற நினைத்தோம்" என்று கூறியுள்ளனர்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் ஆட்டின் உரிமையாளர் ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இரு இளைஞர்களையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்