
அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது '2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலுக்காக பாஜக எந்தவித கீழ்த்தர அரசியலை செய்யும் என நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழுவில் முதல்வர் பேசியுள்ளாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன' என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ''ஸ்டாலின் குழம்பிப் போயிருக்கிறார் என்று உங்களுக்கே தெரியல. காலையில் எழுந்திருக்கும் பொழுதே யாராவது பிரச்சனையை கிளப்பிருப்பாங்களா? அப்படினு பயந்துகொண்டே எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. முதலில் அந்த குழப்பத்தில் இருந்து ஸ்டாலின் தெளிவதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'மதத்தை வைத்து பாஜக தூண்டுகிறார்கள்...' என கேள்வியை எழுப்ப முற்பட்ட நேரத்தில் சடாரென ஹெச்.ராஜா காட்டமாக ''இங்க பாருங்க ஆன்மீகம் இல்லாத மனிதன் யார்?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர் சட்டென்று 'தந்தை பெரியார்' என்று சொல்ல, சிரித்த ஹெச்.ராஜா ''யூ ஆர் தி இக்நோரண்ட்... என் சகோதரி துர்கா கூட ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள நபர்தான். மதச்சார்பற்ற அரசு என ஏன் சொல்கிறோம். அரசுக்கு மதம் இல்லை. மன்மோகன் சிங்கிற்கு மதம் உண்டா இல்லையா? மதம் உண்டு இல்லையென்றால் டர்பன் கட்டி இருக்க முடியுமா? ஆனால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. அது தனிமனிதனுக்கான மத உரிமை. நிர்வாகத்திற்குத்தான் மதம் இல்லை'' என்றார்.