
திருநங்கை ஒருவரை காதலித்த இளைஞரும், திருநங்கையும் ஒரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காரைக்கால் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இருவருக்கும் இடையே உண்டான பாலினம் மாறிய காதலுக்கு இளைஞரின் வீட்டில் கிளம்பிய எதிர்ப்பே தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
சாதி மாறுத்து காதலித்து அந்த காதலுக்கு எதிர்ப்பு உண்டாகி தற்கொலை செய்துகொண்டதையும், ஆணும், பெண்ணும் காதலித்து அவர்களுக்கு யாராவது ஒருவர் வீட்டால் பிரச்சனை உண்டாகும்போது ஒன்று சேரமுடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை கண்டிருக்கிறோம். ஆனால் திருநங்கை ஒருவரை காதலித்த இளைஞனும், திருநங்கையும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது, அப்பகுதி மக்களுக்கு.
இது குறித்து விசாரிக்கையில்," காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப். இருபத்து ஆறு வயதான இவர் திருநள்ளாறு பகுதியில் உள்ள உஜாலா கம்பெனி ஒன்றில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். அதேபோல காரைக்கால் நிரவி பகுதியை சேர்ந்த சிவானி என்கிற திருநங்கையை திலிப் காதலித்திருக்கிறார். கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்துள்ளனர்.

இந்தநிலையில் திருநங்கையான சிவானியை திலிப் காதலித்து வருவதை தெரிந்துகொண்ட திலிப்பின் பெற்றோர்களும், உறவினர்களும் கோபத்தோடு எச்சரித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. ஆனாலும் இருவரும் பிரிந்து செல்வதாக இல்லை. சில நாட்கள் கழித்து காரைக்கால் அடுத்துள்ள ஒடுதுறை என்கிற பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து அதில் இருவரும் கணவன், மனைவியாகவே வசித்து வந்துள்ளனர். அதோடு திருநங்கை சிவானியை அடிக்கடிவெளியே அழைத்து செல்வதும், பைக்கில் காரைக்காலில் வளம் வருவதையும் வாடிக்கையாகவே கொண்டிருந்திருக்கிறார் திலிப்.
இதற்கிடையில் திலிப் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுத்தபடியே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிவானி இருவரும் பிரிந்துவிடலாம் என கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் 19 ம் தேதி இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை (20.06.2020) வழக்கமாக வீட்டு கதவு திறக்கப்படாமல் இருக்க வீட்டு உரிமையாளர் நிரவி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த நிரவி காவலர்கள் பூட்டி இருந்த வீட்டை உடைத்து பார்த்தபோது, சிவானியும், திலிப்பும் தனி தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. பின்னர் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே வீட்டில் உள்ள தனித்தனி அறையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா, அல்லது கோயம்புத்தூர் பனைமரத்தூரில் இரு திருநங்கைகளால் ஒரு இளைஞனுக்கு நேர்ந்ததுபோல திலீப்பை கொலை செய்துவிட்டு, சிவானி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.