Skip to main content

எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளது..! – அரசுத் தரப்பில் தகவல் 

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

Lok Ayukta has taken up the complaint against SP Velumani

 

தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு புகார் அளித்திருந்தார். அதேபோல, கரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி, ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் அப்பாவு புகார் அளித்திருந்தார்.

 

இந்த இரு புகார்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களைப் பொதுத்துறை செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்பு துறை அனுப்பி உள்ளதாகக் குற்றம்சாட்டி, ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளை அப்பாவு தொடர்ந்திருந்தார். அதே போல, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018-ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சித் துறை அமைச்சர் மீதான புகார் குறித்து, லோக் ஆயுக்தா  விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், உணவுத்துறை அமைச்சர் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச்செயலாளர் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால் புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 5 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்