Skip to main content

நூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.


இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஆத்தூர், திண்டுக்கல், வத்தலக்குண்டு. நிலக்கோட்டை, நத்தம், ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் முதல் கட்டமாக நாளை (27.12.2019) தேர்தல் நடைபெறவுள்ளது. 


இந்நிலையில் முதல் கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை  நிறச்சீட்டும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறச்சீட்டும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிறச்சீட்டும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறச்சீட்டும் பயன்படுத்தப்படுகிறது.

local body election money distribution election officers


ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் நான்கு ஓட்டுகள் போட வேண்டும் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதேபோல் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து, அந்தந்த பகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு எந்த இடத்தில் தங்கள் கட்சி சின்னம் இடம் பெற்றிருக்கிறது என்பதை மக்களிடம் விளக்கி, தங்கள் சின்னத்துக்கு வாக்களிக்கும் படி வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


இந்த நிலையில் நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய ஒன்றியப் பகுதிகளில் போட்டியிடும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். 


அதில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு தலா 100 முதல் 200 ரூபாய் வரையும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 200 முதல் 500 ரூபாய் வரையும், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 500 முதல் 1000 ரூபாய் வரை வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று தங்கள் கட்சி சின்னத்துக்கு வாக்களிக்கும் படி பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இதனை தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் கண்டு  கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்