தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் விதித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து விதித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாநிலத்தில் உள்ள கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 08.00 மணி முதல் காலை 07.00 மணி வரை நடமாடக் கூடாது; மீறினால் ரூபாய் 1,000 அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்; அலுவலகங்களில் சானிடைசரை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை அரசு வழங்கிய போதும், பொதுமக்களின் அலட்சியத்தால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள அரசு, கரோனா தடுப்பூசி முகாம்களை அதிகளவில் அமைத்து, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தி வருகிறது.
இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் ஒருசில வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பதை நிறுத்திவிட்டனர். இதில், ஒரு சில வேட்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், தே.மு.தி.க. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கடந்த மார்ச் 19- ஆம் தேதி கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், எல்.கே.சுதீஷுக்கு கரோனா பாதிப்பு குறையாததால், அவர் கிண்டியில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையான கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.