எப்போதும் பரபரப்பாக காணப்படும் குமரி மாவட்டம் தக்கலை பஸ்நிலையத்தில் இன்று காலையில் இருந்தே 12 வயதான மனநிலை பாதித்த சிறுமி ஒருவர் ஒவ்வொரு பஸ்சில் ஏறி இறங்கியும், பஸ்நிலையத்தில் வந்து செல்லும் பஸ்சின் முன்னும் பின்னும் ஒடிக்கொண்டியிருந்தார்.
இதை அங்கு நின்றவர்கள் வேடிக்கையாக பார்த்து கொண்டியிருந்தார்களே தவிர அந்த சிறுமியை மீட்க யாரும் முன் வரவில்லை. இந்தநிலையில் பஸ்நிலையத்தின் பஸ் நேரம் குறிப்பாளர் யோபுதாஸ் தக்கலை போலிசில் அந்த சிறுமியை குறித்து தகவல் கொடுத்தார். ஆனால் அங்கிருந்து யாரும் சிறுமியை மீட்க வரவில்லை. காலையில் இருந்து மாலை வரை 3 முறை போலிசுக்கு அவர் தகவல் சொல்லியும் யாரும் வரவில்லை. பின்னர் மாலையில் தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு தகவல் சொன்னதையடுத்து அவர் போலீஸ் ஒருவருடன் வந்து அந்த சிறுமியை மீட்டு அவரிடம் இருந்த தென்காசி முகவரி கொண்ட ஒரு நகை கடையின் பர்ஸை பார்த்தபோது அதில் செங்கோட்டை ஆயர்குடி அமீர் சேவா மனநிலை பாதித்த குழந்தைகள் காப்பகம் என்ற முகவரி இருந்தது.
பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அந்த முகவரின் அடிப்படையில் டிஎஸ்பி விசாரித்ததில் அந்த சிறுமி அந்த காப்பகத்தில் தங்கியிருந்து படித்து வந்தவர் என்றும், தற்போது ழூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அந்த சிறுமியை பெற்றோர் தக்கலை அருகே வேர்கிளம்பியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இன்று காலையில் பெற்றோருக்கு தெரியமல் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். சிறுமியை காணாமல் பெற்றோர்களும் தேடி வந்தனர். இந்தநிலையில்தான் பஸ்நிலையத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளார்.
இதற்கிடையில் சிறுமியை பற்றி தகவல் கொடுத்த பிறகும் அந்த சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்காத தக்கலை காவல்நிலைய போலிசரை டிஎஸ்பி கடுமையாக திட்டி டோஸ் விட்டார்.