
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட் கடந்த 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய (01/04/2025)சட்டப்பேரவை விவாதத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தின் தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை குறிப்பிட்ட சபாநாயகர் அப்பாவு 'இந்திய தலைநகரை டெல்லிக்கு பதிலாக சென்னையை கொண்டு வாருங்கள்' என நகைச்சுவையாக தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சபாநாயகரின் கூற்றுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் 'வாய்ப்பு இருந்தால் கொண்டு வருவோம். திருச்சிக்கு பல வந்தே பாரத் ரயில்களை கொண்டுவந்துள்ளோம். காவிரி ஆறு ஓடுகிறது' என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'பாஜக அன்போடு கோரிக்கை வைத்துள்ளது. வாய்ப்பிருந்தால் பாஜகவின் இந்த கோரிக்கையை அன்புடன் தமிழக அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்' என தெரிவித்தார். இதனால் மீண்டும் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.