Skip to main content

'உள்ளுரிலேயே எங்களை அகதியாக்காதே’ - 75வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

‘Let us live’ - 75th day of people struggle

 

திருவண்ணாமலை மாவட்டம், என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ள மாவட்டம். மழையில்லாமல் விவசாயம் பொய்க்கும் காலங்களில், விவசாயம் செய்ய முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளிமாநிலங்களில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கொண்டு வந்து வெளிமாநிலங்களில் கொத்தடிமைகளாக பணியாற்றும் ஏழை மக்களை கொண்டு வந்து வேலைவாய்ப்பு தரவேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

 
2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள செய்யார் பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டது. அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செங்கம் பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. 2018 ஆம் ஆண்டில் புதுவை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட பெரியகோளாப்பாடி கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கப்படும் என அறிவித்தது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக. தற்போது அந்தப்பகுதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு தொழிலதிபர்களை தொழிற்சாலைகள் தொடங்க வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

 

கடந்த 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் சமர்பித்த பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், தொழில்வளர்ச்சியில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். 

 

‘Let us live’ - 75th day of people struggle

 

தற்போது தொழிற்பேட்டைக்கு எதிராக பாலியப்பட்டு கிராம மக்கள் 77 வது நாளாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். போராட்டம் தொடங்கி 75 நாளன்று கிரிவலப்பாதையில் தங்களது கண்டன கோஷங்களை எழுப்பியபடி கிரிவலம் வந்தனர். அப்போது அவர்கள், ‘எங்கள் பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்காதே, உள்ளுரிலேயே எங்களை அகதியாக்காதே, எங்களை வாழவிடு’ என பல்வேறு முழக்கங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் எழுப்பினர்.

 

தொழிற்சாலை வேண்டும் எனக்கேட்ட பகுதியிலிருந்து தொழிற்சாலைக்கு எதிராக போராடுவது ஏன் என விசாரித்தபோது, பாலியப்பட்டுக்கு அடுத்த கிராமம் கோளாப்பாடி. பெரியகோளாப்பாடி கிராமத்திற்கு மேற்கே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையக்கபடுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து மேற்கு நோக்கி செங்கம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்கள் உள்ளன. அதை கையகப்படுத்தி விரிவுப்படுத்தலாம். ஆனால் அதற்கு பதிலாக கிழக்கு பகுதியில் அதாவது திருவண்ணாமலை வரும் வழியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு காரணம் கவுத்திமலை, வேடியப்பன்மலையை குறிவைத்தே இந்த சிப்காட் தொடங்கப்படுவதாக சந்தேகிக்கிறோம். இந்த மலையில் உள்ள இரும்பு தாதுக்களை வெட்டியெடுக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜிண்டால் நிறுவனம் முயற்சி எடுத்தது. மக்கள் போராட்டம் அதை விரட்டியது. உச்சநீதிமன்றம் வரை அந்நிறுவனம் முயற்சித்தும் மக்கள் கருத்துகேட்கச் சொன்னது. அந்த நிறுவனத்துக்காகவே இப்போது சிப்காட் அறிவிப்பு தந்து, இந்தப்பகுதியில் உள்ள எங்கள் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார்கள்.  

 

கடந்த டிசம்பர் மாதம் வருவாய்த்துறை அதிகாரிகள் பாலியப்பட்டு, புனல்காடு போன்ற கிராமங்களுக்கு வந்து இந்தப்பகுதிகளை பார்வையிட்டுவிட்டு சென்றுள்ளனர். பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட புனல்காடு, செல்வபுரம், வாணியம்பாடி, அண்ணாநகர், அருந்ததியர் காலணி என 6 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த பகுதியின் விவசாய நிலங்கள் பொன்விளையும் பூமி என அழைக்கப்படும் பகுதி. தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படும் நெல், மணிலா பயிரோடு, பூ பயிர் அதிகம் செய்யப்படும் கிராமங்கள் இவை. இங்குள்ள நிலங்களில் பூக்கும் சாமந்தி, மல்லி, முல்லை, கனகாம்பரம் என குறிப்பிட்ட சில பூக்கள் இங்கிருந்தே பெங்களுரூ, சென்னை மாநகரங்களில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு அதிகளவில் பயணமாகின்றன. அப்படிப்பட்ட விவசாய நிலங்களை தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர் அதிகாரிகள், அதனால்தான் எதிர்க்கிறோம் என்கிறார்கள் போராட்டக்களத்தில் உள்ள மக்கள்.

 

‘Let us live’ - 75th day of people struggle

 

எங்களுக்கு வருவாய்த்துறையில் உள்ள சில நல்ல அதிகாரிகள் மூலமாக எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள், அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள 1200 ஏக்கர் நிலங்களை சிப்காட் அமைக்க கையகப்படுத்த முடிவு செய்து வரைப்படம் தயாரித்துள்ளார்கள் என்கிற தகவல் தெரிந்தது. சில அரசியல்வாதிகளுக்காக அந்த வரைப்படத்தில் அவர்கள் நிலங்கள், வீடு பாதிக்கப்படாத மாதிரி மீண்டும் ஒரு வரைப்படம் தயாரித்துள்ளார்கள்.

 

அரசியல்வாதிகள், அதிகாரம் உள்ளவர்கள் தங்களது சொத்துக்களை காப்பாற்றிக்கொள்கிறார்கள். எதுவுமில்லாத விவசாயிகளான நாங்கள்தான் பாதிக்கப்படுகிறோம், எங்கள் நிலங்களை கையகப்படுத்தாதீர்கள் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உட்பட அதிகாரிகளிடம் முறையிட்டபோது, எங்களை மிரட்டுகிறார்கள். எங்களை காப்பாற்றிக்கொள்ள நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம் என்கிறார்கள் அக்கிராம மக்கள். 

 

இம்மக்களின் போராட்டத்துக்கு இடதுசாரிகட்சிகள் உட்பட மே17 இயக்கம், நாம்தமிழர் கட்சி, கொளத்தூர்மணி பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன் தலைவர்கள் களத்துக்கு நேரடியாக வந்து அம்மக்களிடம் பேசி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

 

இவ்வளவு நடந்தும் ஆட்சியாளர்களோ, மாவட்ட நிர்வாகமோ இதுவரை அம்மக்களின் கேள்விக்கு பதில் சொல்லவோ, அவர்களிடம் பேசவோ, அவர்களின் பயத்தை போக்கவோ, தொழிற்பேட்டை குறித்து விளக்கம் சொல்லவோ முயற்சிக்கவேயில்லை என்பதே நிதர்சனம். இது ஆட்சியாளர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் விவசாய மக்களிடம் மெல்லமெல்ல கோபத்தை உருவாக்கிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்