நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் 'தகைசால் தமிழர்' விருது மூத்த அரசியல்வாதியும், சுதந்திர போராட்ட வீரருமான ஐயா நல்லகண்ணுவிற்கு தமிழக முதல்வர் வழங்கினார். 'அப்துல் கலாம்' விருது முனைவர் இஞ்ஞாசிமுத்துவுக்கும், நாகை கீழ்வேளுரை சேர்ந்த இளவரசி என்பவருக்கு துணிவு, சாகசங்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருதும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய அமுதா சாந்திக்கு 'சிறந்த சமூகப் பணியாளர்' விருதும், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' விருது லட்சுமி பிரியாவுக்கும் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் 'மாநில இளைஞர் விருது' விஜயகுமார், முஹம்மது ஆசிக், வேலுரை சேர்ந்த ஸ்ரீகாந்த், நாகையைச் சேர்ந்த சிவரஞ்சனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ஐயா நல்லகண்ணுவிற்கு 'தகைசால் தமிழர்' விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் 10 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் வழங்கிய நிலையில், விருதினை பெற்றுக் கொண்ட ஐயா நல்லகண்ணு தனக்கு வழங்கப்பட்ட விருது தொகையான 10 லட்சத்துடன் தன்னுடைய நிதியாக ஐந்தாயிரம் ரூபாயை சேர்த்து அந்த தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கே வழங்கினார். இதனை அறிந்த முதல்வர் நெகிழ்ந்து மேடையிலேயே அவரை கைகூப்பி நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ஐயா நல்லகண்ணு, அவரது 80-ஆவது பிறந்தநாளன்று அவர் செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை திரட்டிக் கொடுத்தபொழுது மீண்டும் அதைக் கட்சி வளர்ச்சிக்கே கொடுத்து, தூய்மையான அரசியல் கரங்களுக்குச் சொந்தக்காரர் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர் என்று போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.