சென்னை அடையாறுவில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஹோட்டலில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (17/07/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர்ராஜு, பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மேலும், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "சின்னசேலம் பள்ளி மாணவியின் தாயாருக்கு அரசுத் தரப்பில் ஆறுதல் கூறவில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மகளிர், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக அரசு, காவல்துறை. உளவுத்துறை செயலிழந்துள்ளது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மூன்று நாள் போராட்டம் நடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணை முடிவடையாத நிலையில், பள்ளிக்குத் தொடர்பில்லை என எப்படி கூற முடியும்?
பள்ளி நிர்வாகம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருந்தால், இந்தநிலை வந்திருக்காது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்காது. மாணவி இறந்த விவகாரத்தில் சந்தேகத்தைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி என்னவாயிற்று?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.