இந்த பொங்கலுக்கு நீங்க வாரிசு படத்திற்கு போவீங்களா? இல்ல துணிவு படத்திற்கு போவீங்களா எனச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சட்டென பதிலளித்த குஷ்பூவின் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை பகுதிக்கு அருகே பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா என்ற பெயரில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கலந்துகொண்டார்.
அப்போது, வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மக்களுடன் ஒன்றாக பொங்கல் வைத்த குஷ்பு, அவர்களோடு சேர்ந்துகொண்டு கையில் வண்ண உடைகளுடன் கும்மியாட்டம் ஆடி அசத்தினார். அதன்பிறகு, ரேக்ளா வண்டியில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்ததை அடுத்து ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், பாஜக நிர்வாகிகளுடன் மேடையில் இருந்த குஷ்பூ காளைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்த்து கைதட்டி வரவேற்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும்போது, “தமிழ்நாட்ட எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். தமிழகம், தமிழ்நாடு என ரெண்டுமே ஒண்ணுதான். இந்தியாவின் முக்கிய அங்கம் தான் தமிழகம். அதுல தப்பில்ல” என ஆளுநர் கருத்துக்கு ஆதரவாக பேசினார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த குஷ்பூ, “பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கு. எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகலயே. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். அப்படி எதுவும் இல்ல” எனப் பேசினார்.
மேலும், இந்த பொங்கலுக்கு நீங்க வாரிசு படத்திற்கு போவீங்களா? இல்ல துணிவு படத்திற்கு போவீங்களா எனக் கேட்ட கேள்விக்கு.. “நா எந்த படத்துக்கும் போகல. வீட்ல தான் இருப்பேன்” எனக் கிண்டலாகப் பதிலளித்தார்.