Skip to main content

46 முறை பேச்சுவாா்த்தையின் பலன் என்ன? தொடா் வேலை நிறுத்தத்தில் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள்!!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

தமிழகத்தில் ரப்பா் தோட்டம் உள்ள ஓரே மாவட்டம் குமாி மாவட்டம்..இங்கு அரசு மற்றும் தனியாா் ரப்பா் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இதில் அரசு ரப்பா் தோட்டத்தில் தற்போது 3000 தொழிலாளா்கள் வேலை செய்கிறாா்கள். அரசு ரப்பா் தோட்டம் தமிழக அரசின் வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தியாகிற ரப்பா் பால் தான் ஆசியாவிலே தரமான ரப்பா் பால் என்ற அங்கிகாரமும் பெற்றுள்ளது.

 

kumari rubber factory employees strike

 

இந்தநிலையில் இங்கு பணிபுாியும் ரப்பா் தோட்ட ஊழியா்கள் நலிவடைந்த நிலையிலேயே காணப்படுகிறாா்கள். அதற்கு காரணம் கடந்த பல ஆண்டுகளாக ஊதியத்தை உயா்த்தாமல் அரசு காலம் தாழ்த்தி கொண்டே செல்கிறது. இதனால் அந்த தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து நம்மிடம் பேசிய சிஐடியு ரப்பா் தோட்ட தொழிலாளா் சங்க செயலாளா் வல்சலகுமாா்.... அரசு ரப்பா் தோட்ட தொழிலாளா்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை சம்பள உயா்வு அளிக்க வேண்டும். இது திமுக ஆட்சியில் முறையாக பின்பற்ற பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது. 1.12.2016 சம்பள உயா்வு வழங்க வேண்டும் இதற்காக 46 முறை அதிகாாிகள் மட்டத்தில் பேச்சு வாா்த்தை நடத்தியும் பலன் இல்லை. 2016 சம்பள உயா்வு ஒப்பந்தமே முடியாத நிலையில் அடுத்து 2019 க்கான சம்பள உயா்வு பேச்சு வாா்த்தையும் தொடங்கபட்டு இருக்க வேண்டும்.

 

kumari rubber factory employees strike

 

இதற்கிடையில் கடந்த ஜீன் மாதம் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வாா்த்தை நடந்தது. அதிலும் எந்த பலனும் இல்லை. முதல்வாிடம் இதுகுறித்து பேசுவதாகவும்  கூறினாா்.  குமாி மாவட்ட தோட்ட தொழிலாளா்களின் சம்பள பிரச்சனை என்பதால் தான் அரசு கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை என கருதுகிறோம்.

இதனால் தான் இன்று முதல் அரசு ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா். இதனால் ஒரு நாளைக்கு சுமாா் 3 கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்