முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
சிதம்பரம் வடக்கு வீதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் நகரத் தலைவர் மக்கின் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அழகிரி கலந்துகொண்டு அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சித்தார்த்தன், மாநில நிர்வாகி ஜெமினி ராதா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே எஸ் அழகிரி, “மன்மோகன் சிங் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கே பேரிழப்பாகும். அவர் பிரதமராக பணியாற்றிய காலத்தில் சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைந்ததை ஏழை மக்களுக்கான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்திச் சிறப்பான நிர்வாகம் செய்தார். அவரது புகழ் ஓங்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கொடூரமான ஒருவன் மாணவியிடம் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் மிகவும் வேதனையானது; கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் தற்போது பாஜக அரசியல் செய்து வருகிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தட்டும். அதே நேரத்தில் மணிப்பூரில் ஒரு பெண்ணை நிர்வாணமாக பாஜகவினர் இழுத்துச் சென்றனர். அதேபோல், உத்தர பிரதேசத்தில் பட்டியலின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக தூக்கி எறிந்தார்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களின் நடைபெற்றது. இதற்கு வாய்கூட திறக்காதவர்கள் தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு போராட்டம் செய்து வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் பத்திரிக்கையாளர் சம்பவத்தில் செருப்பை கழட்டிக் காட்டி கீழ்த்தரமான வார்த்தைகளை கூறி பேசுகிறார். சாட்டையால் அடித்துக் கொள்வேன் எனக் கூறி அடித்துக் கொள்கிறார். அவருக்கு சாட்டை அடித்துக் கொள்ளவும் தெரியவில்லை. மக்களிடம் பேசவும் தெரியவில்லை. எனவே இவர் லண்டனுக்கு போய் இது போன்ற அற்ப அரசியலில் தான் கற்றுக் கொண்டாரா? வக்கிர புத்தியுடன் அரசியலில் ஈடுபடக்கூடாது. தமிழக ஆளுநர் துணைவேந்தர் நியமன விவகாரத்தில் எல்லையை மீறித் தலையிடுவது சரியான நடவடிக்கை அல்ல. துணைவேந்தர் தேடல் குழுவில் 3 பேர் அல்லது 5 பேர் இருப்பது தான் சரி. 4 பேர் இருந்தால் போட்டி என வரும் போது சமநிலை ஏற்படும் அதற்கு சட்டப்படி அனுமதி இல்லை எனக் கூறினார்.