ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட கோரமண்டல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தேசத்தையே உலுக்கியது. இந்தச் சூழலில் கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் கோச் ஒன்றின் ஸ்பிரிங் அழுத்தப்பட்டையில் ஏற்பட்ட வெடிப்பு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கொல்லம் - சென்னை இடையேயான 16102 என்ற எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி மதுரை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தக் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கப்படி நேற்று மதியம் 12.15 மணியளவில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு வழக்கம் போல் குறிப்பாக கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வரை மலைப் பாதைகள் பாலங்களைக் கடந்து வந்து கொண்டிருந்தது. மாலை 3.15 மணியளவில் செங்கோட்டை அருகே வந்தபோது ரயிலில் வினோதமான ஒலியைக் கேட்ட ரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை சோதனையிட்டிருக்கிறார்கள்.
அது சமயம் எஸ் 3 கோச்சின் கோளாறு தெரியவே பரிசோதித்ததில் அந்தப் பெட்டியின் அதிர்வையும் குலுங்கலையும் தாங்கக்கூடிய ஸ்பிரிங் பகுதியின் அதாவது சக்கரத்திற்கும் பெட்டிக்கும் இடையே பொருத்தப்பட்டிருந்த பட்டை, விரிசல் கண்டு உடைந்தாற்போன்றிருப்பது தெரியவர, இதற்கு மேல் ரயிலை இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக எஸ். 3 பெட்டியை அகற்றியவர்கள், அதிலிருந்த பயணிகளை எஸ் 4 பெட்டிக்கு மாற்றினர். பின்னர் எஸ் 3 கோச்சை ரயில் நிலையத்தில் தனியே நிறுத்தி வைத்தனர். இதனால் 2 மணி நேரம் தாமதமாகக் கிளம்பிய கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் மதுரை சென்ற பிறகு பழுதான எஸ் 3 பெட்டிக்கு பதில் வேறு பெட்டி இணைக்கப்பட்டு பயணிகளுக்கு வசதி செய்து தரப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் கொல்லம் புனலூர் இடையே 70 கி.மீ வேகத்திலும், மலைப்பாதையான புனலூர்-செங்கோட்டை இடையே 30 கி.மீ வேகத்திலும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ‘எஸ் 3 கோச்சின் சட்டம் உடைந்தது கண்டு அதிர்ச்சியானோம். சத்தம் கேட்டு ரயில்வே பணியாளர்கள் உடனடியாக கண்டுபிடித்து சரிசெய்து விட்டனர். கேரளாவில் மலைப் பகுதியில் பயணிக்கும்போது இந்தப் பிரச்சினை நிகழ்ந்தால் பெரும் விபத்து நேர்ந்திருக்குமே. நல்ல வேளை ரயில்வே ஊழியர்கள் சரியான நேரத்தில் கண்டுபிடித்துவிட்டனர்.’ என்று பதற்றத்துடன் சொன்னார்கள் இதில் பயணித்த பயணிகள்.