மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பெண்கள் உட்பட 51 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், சாய்பாபா கோவில் பகுதிகளை சேர்ந்த சிலர் ஆயுத பூஜை விடுமுறையைடுத்து மேட்டுப்பாளையம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர், அப்பொழுது பவானி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். மதிய நேரம் ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருந்ததால் ஆற்றைக் கடந்து மறுகரைக்கு விளையாட்டாக சென்றுள்ளனர். மாலை நேரம் ஆனதும் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு சென்றவர்களால் மீண்டும் இக் கரைக்கு திரும்ப முடியாமல் அங்கிருந்த மணல் திட்டில் சிக்கிக் கொண்டனர்.
இரவு நேரம் ஆனதால் அவர்கள் செய்வதறியாமல் மிகுந்த அச்சமடைந்தனர். இதையடுத்து உள்ளுர் மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறைக்கு தகவல் கொடுதனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வருாய்த் துறையினர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பெண்கள் , உட்பட 51 பேரை பரிசல் மூலம் ஐந்தைந்து பேராக பத்திரமாக மீட்டனர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் என உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.