நாகர்கோவிலில் குளிர்பானத்தில் விஷம் வைத்து இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிச் சென்ற மொபைல் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய சென்ற இடத்தில் ஏற்பட்ட கூடா நட்பு கொலையில் முடிந்த சம்பவம் நாகர் கோவிலில் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த குலசேகரப்பட்டினம் கால்வாயில் கடந்த 20ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கால்வாயில் வீசப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் அது தொடர்பாக விசாரித்த பொழுது அந்த பெண் பிணத்தோடுசெக்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மனைவி லில்லிபாய் என்று தெரியவந்தது. அதன்பின் உடலை கைப்பற்றிய போலீசார் பிணக்கூறாய்வுக்கு உடலை அனுப்பி வைத்தனர். பிண க்கூறாய்வுஇறுதி அறிக்கையில் சம்பந்தப்பட்ட நபர் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர்.
அந்த விசாரணையில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த லில்லிபாய் சம்பவம் நடந்த நாட்களுக்கு முன்காணாமல் போனதும்,அவருடைய செல்போன் காணாமல் போனதும் தெரியவந்தது. இந்நிலையில் அவர் கொலைசெய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அதேபோல் குளிர்பானத்தில் விஷம் இருந்தது என அனைத்தையும் பொருத்திப் பார்த்த காவல்துறையினர் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.
அதனடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் அவருடைய செல்போனை கைப்பற்றி அவருடன் இறுதியாக பேசியவர் யார் என போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட லில்லிபாயுடன் கடைசியாக பேசியவர் ராஜேஷ் என்பது தெரிய வந்தது.
ராஜேஷ் லில்லிபாயின் பக்கத்து வீட்டுக்காரர் ஆவார். இவர் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மட்டுமல்லாது பல நாட்களுக்கு முன்பே இவர்களுக்கிடையியே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. தனது ரீசார்ஜ் கடைக்கு மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய வந்த லில்லிபாயின் நம்பரை கைப்பற்றிய ராஜேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு காதல் தூது விடுத்துள்ளார். நாட்கள் போக இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் பல இடங்களுக்கு பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார் ராஜேஷ்.
இப்படி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் தனது ரீசார்ஜ் கடையையும், ஸ்டூடியோவை பெரிதுபடுத்துவதாகவும் அதற்காக செலவாகும் எனவே உதவி கோரியுள்ளார். ராஜேஷ் இவரிடம் உதவி கோரிய நிலையில் தன்னிடமிருந்த தங்க நகைகளை கொடுத்து உதவியுள்ளார் லில்லிபாய்.
நாட்கள் செல்ல செல்ல தான் கொடுத்த நகைகளை திரும்பக் கேட்டுள்ளார் லில்லிபாய். இதனால் அடிக்கடி இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லில்லிபாயை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அவரை சமாதானப் படுத்துவது போல நடித்து தனது காரில் கூட்டிச் சென்று கன்னியாகுமரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஒரே அறையில் தங்கி உள்ளான்.
அப்பொழுது குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த ராஜேஷ் மது குடித்துள்ளான். மதுபோதையில் இருந்த ராஜேஷ் குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்ட விஷத்தை குடித்து இறந்து போன லில்லிபாயை காரில் ஏற்றிக்கொண்டு சிற்றாறு கால்வாய் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளான். யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்ற பொழுது கூட அவரது வீட்டிற்கு சென்று ஏதும் தெரியாத போல் பங்கேற்றுள்ளான் ராஜேஷ் என போலீசார் தெரிவித்துள்ளனர்.