நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னீர்செல்வம் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் மாணவிகளை ஆபாசமாகத் தனது மொபைலில் ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளி முன்பு திரண்டனர். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்திடம் இருந்து அவரது மொபைலை வாங்கி பார்த்தபோது, அதில் ஏராளமான ஆபாசப் படங்கள் இருந்ததோடு, மொபைலில் நிறைய படங்கள் அழிக்கப்பட்டு இருந்ததையும் அதனை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் மீண்டும் பதிவேற்றம் செய்து பார்த்தபோது பள்ளி மாணவிகளை பன்னீர்செல்வம் ஆபாசமாகப் படம் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சர்மிளா, ஆசிரியர் பன்னீர்செல்வத்தை தனி அறையில் வைத்து பூட்டிவிட்டு, இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசாரிடம் மாணவிகளின் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர். போலீசார், ஆசிரியர் இருந்த அறையை திறக்க முயன்றனர். ஆனால் அவர்களைத் திறக்கவிடாமல் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் பரமத்தி வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.