தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவிற்கு 20 சீட்டுகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் நின்று சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ''அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது. அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள். சீட்டு கேட்கும் அளவிற்கு மானம்கெட்டுப் போகவில்லை. அதிமுக தோல்விக்கு வேலை செய்வோம்'' என்றார்.
அண்மையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் சமக கட்சி சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து கூட்டணி குறித்து பேசியிருந்த நிலையில், கமல் - சரத்குமார் கூட்டணி உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.