காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொளி வாயிலாக நேற்று (30.10.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம், தலைமை பொறியாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு கர்நாடகா 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமை தாங்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறையின் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு நேற்று பிறப்பித்த பரிந்துரைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் உத்தரவாக வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “நவம்பர் மாதம் கர்நாடக அரசு தர வேண்டிய நீரின் அளவு 16.44 டி.எம்.சி. தண்ணீர். இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண் பிடித்ததில்லை. ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள். நாம் ஏதோ சலுகை கேட்பதாக நினைக்கிறார்கள்.
இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் விதித்த விதிப்படி தான் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நடக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசே இந்த உத்தரவை மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக கூறி இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்த விவகாரத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.