மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்துவதை திரும்ப பெற கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர்கள், வழக்கறிஞர்கள், உட்பட பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் போராடி வருகின்றனர். இதனிடையே கேரள அரசு இந்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீா்மானம் நிறைவேற்றியதோடு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் இன்று (12/02/2020) மாலை குமரி மக்கள் ஓற்றுமை இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை 58 கி.மீ தூரம் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனா். அதேபோல் நாகர்கோவிலில் நடந்த போராட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனா். மேலும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவா்கள், செயலாளா்கள், முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.