சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் தமிழக சிறைத்துறைக்கு ஒரு அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் சேகரிக்கப்படும்.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி சென்னை புத்தகக் கண்காட்சியை நேற்று பார்வையிட்டார். அப்போது சிறைத்துறையின் அரங்கில் கைதிகளுக்காக 150 புத்தகங்களை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புத்தகங்கள் தான் மனிதனுக்கு புதிய உலகத்தைக் காட்டக்கூடிய ஒன்று. உலகத்தின் மிகச்சிறந்த தலைவர்கள் எல்லாம் வாசிப்புப் பழக்கம் உடையவர்களாகவும் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். அவர்களால் தான் அடுத்த தலைமுறைகளைப் பற்றி சிந்திக்க முடியும். அப்படிப்பட்ட கருத்துகளை பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
சிறையில் இருப்பவர்களுக்கு உற்ற தோழமையாக இருக்கக் கூடியது புத்தகங்கள் மட்டும் தான். அதை நானும் உணர்ந்துள்ளேன். சிறையில் இருக்கும் மக்களுக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட போது என்னிடம் இருக்கக்கூடிய; என்னால் வழங்க முடிந்த புத்தகங்களை வழங்குவதற்காக வந்துள்ளோம்.
பிடித்த புத்தகங்கள் என்பது ஒரு வயது வரை தான் இருக்கும். பிடிக்காத புத்தகத்தையும் படித்த பின்பு தான் ஒன்றை நிராகரிக்க முடியும். எது கிடைத்தாலும் படிக்க வேண்டும். புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்கள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளனர். உலகம் முழுவதும் புத்தகக் கண்காட்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளது. வாசிப்பு என்பது புத்தகமாக இல்லாமல் வேறு விஷயங்களாக வளர்ந்துள்ளது” எனக் கூறினார்.