
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
அப்போது ஒரே சமூகத்தினர் உள்ள ஊரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் மரக்கட்டைகளும், இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஊருக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து நுழைய முயற்சித்த கட்சியினரை ஊருக்குள் வராதே, என்ன செய்தார் எம்.பி. 5 ஆண்டுகளில் சாலை கூட சரியாக போடவில்லை. எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பை தெரிவித்து ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஆகி பரபரப்பாகியது மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனத்தின் மீது மது பாட்டிலும், கற்களையும் வீசி கண்ணாடியை உடைப்போம். அசிங்கப்படாமல் போய்விடுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் துரைமுருகனை அதே சமூகத்தினர் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.