தேவராஜ் புஷ்பா மணி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் வெள்ளிமலை சேராப்பட்டு செல்லும் சாலையில், இந்நாடு அருகே மேல்நிலவூர் வனபகுதியில் கடந்த 7ந்தேதி அழுகிய நிலையில் ஆண் பிரேதம் கிடந்துள்ளது. மேலும் கைகள் கட்டப்பட்டு கவிழ்ந்து கிடந்தது. கவிழ்ந்து கிடந்த உடலில் மேல் வரிசையாக கற்கள் அடுக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜகோபால் சடலத்தை பார்வையிட்டு கரியாலூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் ராஜா, சிவலிங்கம் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் சடலம் கிடந்த இடம் தருமபுரி மாவட்ட எல்லை என்று கூறி அலைகழித்துள்ளனர்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் புகாரின்பேரில் கரியாலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் எஸ்பி சங்கர் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ், ஏழுமலை, மனோகர், முருகன், தங்கதுரை உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கரியாலூர் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீழாத்துகுழியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2ந் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் தனது கள்ளக்காதலன் மணி மற்றும் அவரின் உறவினர் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து, குடிபோதையில் படுத்திருந்த கணவர் தேவராஜ்(30) என்பவரை வாயில் துணை வைத்து அடைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.
இதையடுத்து போலிசார் மனைவி புஷ்பா(26) சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, கீரகடை பகுதியை சேர்ந்த சேர்ந்த கள்ளக்காதலன் மணி(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுரேஷை கரியாலூர் போலிசார் தேடி வருகின்றனர்.
மனைவி புஷ்பா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “நானும் எனது கணவர் தேவராஜ் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மைசூர் சென்றோம். அங்கு வேலைக்கு சென்றபோது சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணி என்ற வாலிபர் பழக்கமானார். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த என் கணவர் என்னை கண்டித்தார்.
இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டிற்கு வந்தோம். இங்கும் எனது கணவர் டிரைவர் வேலைக்கு சென்று விடுவதால் நானும், மணியும் கள்ளக்காதலை தொடர்ந்தோம். இது தெரிந்த கணவர் குடித்து விட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். இதனால் எனது கணவரை கள்ளக்காதலன் மணியுடன் சேர்ந்து தீர்த்துகட்ட திட்டம் தீட்டினோம்.
அதன்படி கடந்த 2ந்தேதி மாலை 7.30 மணியளவில் என் வீட்டிற்கு வந்த மணி, அவரது உறவினர் சுரேஷ், நானும் சேர்ந்து கொலை செய்தோம். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க என் கணவரின் சடலத்தை மணி, சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் எடுத்து சென்று மேல்நிலவுரை அடுத்த வனபகுதியில் போட்டு விட்டு ஊருக்கு சென்று விட்டனர். பின்னர் போலிசாரின் தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டோம்” என்றார்.