தமிழகத்தில் கடந்த ஆண்டு சுமார் 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருந்த ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்படி நடைபெற்ற மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2019ல் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமாகி அந்த மாவட்ட ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் ஒன்று சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்திர தாஸ்.
இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அவரது ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒருநாள் முழுவதும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் சைவ, அசைவ உணவு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் புதுப்பட்டு கிராமத்திலிருந்து சங்கராபுரம் செல்வதற்கும் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள புதூர் நெடுஞ்சாலை வரை செல்வதற்கும் போக்குவரத்து வசதி மிகவும் குறைவாக இருந்தது.
இதை கருத்தில் கொண்டு புதுப்பட்டு ஊராட்சி கிராமத்திலிருந்து இலவச ஆட்டோ வசதியை ஏற்படுத்தி உள்ளார். இதை அந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நகரங்களுக்குச் சென்று வர பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணி செய்து வரும் ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரதாசுக்கு கிராம மக்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.