
மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என்றும் மக்கள் தன்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கள்ளக்குறிச்சி புதிய காவல்துறைக் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த ஜெயச்சந்திரன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜியா உல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜியாவுல் ஹக் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையப் பகுதிகளிலும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் சரி செய்யப்படும். இந்த மாவட்டத்தில் விவசாயம் அதிகப்படியாக உள்ளது. எனவே மாவட்டம் அமைதியாக இருக்க அனைத்துத் தரப்பினரிடமும் பிரச்சனைகள் ஏற்படும்போது அவர்களை அழைத்துச் சமாதானம் செய்யப்படும். மேலும் போக்குவரத்துப் பிரச்சினையாக இருந்தாலும் அதனைக் காவல்துறை, வருவாய்துறை, பொதுமக்கள் உதவியுடன் உடனடியாகத் தீர்க்கப்படும். இது போன்று எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பொதுமக்கள் என்னை நேரில் தொடர்பு கொள்ளலாம் அவர்கள் கூறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜியாவுல் ஹக் ஏற்கனவே அரியலூர், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சேலம் மாவட்டத்தில் அமலாக்கப் பிரிவிலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பணி ஏற்பு நிகழ்ச்சியின் போது திருக்கோவிலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் உளுந்தூர்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் ஆய்வாளர்கள் சின்னசேலம் ராஜா, குமார், உளுந்தூர்பேட்டை எழிலரசி ரவிச்சந்திரன், சுமதி, விஜி, தனிப்பிரிவு ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறை அலுவலகத்தில் பணி செய்யும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.