தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு துறையும், நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து, 'வாங்க ரசிக்கலாம்; ருசிக்கலாம்' என்கிற தலைப்பில், ' மதராசப் பட்டிணம் விருந்து' எனும் விழாவை இன்று தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடத்துகிறது.
![chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/h8dy96nrWAsYqMtvo5zhBWcIdqab3am7mdyvo3oYBDI/1568348877/sites/default/files/inline-images/42_7.jpg)
சென்னையின் பாரம்பரிய உணவுகளையும் அதன் பயன்பாடுகளையும் சென்னை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு உணவுகளை இவ்விழாவில் காட்சிப்படுத்துகிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. சென்னை தீவுத்திடலில் நடக்கும் இந்த விழாவின் நோக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், விழாவின் தலைப்பு சர்ச்சையாகியிருக்கிறது.
இது குறித்துப் பேசும் தமிழ் உணர்வாளர்களான அரசு அதிகாரிகள், "மதராசப் பட்டினங்கிறது பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த பெயர். கலைஞர் ஆட்சி காலத்தில் மதராஸ் என்பதை சென்னை என பெயர் மாற்றம் செய்தார். சென்னப்ப நாயக்கரின் அடையாளமாக, சென்னை என பெயர் சூட்டி, அதனை கெஜட்டிலும் பதிவு செய்தார் கலைஞர்.
அப்படியிருக்கையில், சென்னை விருந்து என தலைப்பு வைத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, மதராசப் பட்டிணம் என வைப்பது சென்னையின் அடையாளத்தை அழிக்கத் துடிக்கும் செயல். தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க திட்டமிட்டு பல வழிகளில் ஊடுறுவி வருகிறது இந்துத்துவா அரசியல். அதனின் ஒரு கட்டமாகவே இதனை பார்க்க வேண்டியிருக்கிறது. வழக்கொழிந்துவிட்ட மதராஸ் என்கிற பெயரில் விழா எடுக்க வேண்டிய அவசியம் எடப்பாடி அரசுக்கு எதற்கு?
அரசு கெஜட்டில் பதிவான பெயரை அழிக்கும் வகையில் அரசாங்கமே முயற்சிக்கலாமா? கலைஞர் வைத்த பெயர் என்பதால் அதனை மறக்கடிக்க எடப்பாடி அரசு முயற்சிக்கிறதா" என ஆவேசப்படுகின்றனர்.
கலைஞர் சூட்டிய பெயரை அழிக்கும் வகையில் விழா எடுக்கும் எடப்பாடி அரசின் நோக்கத்தை திமுக தலைமைக்கு உணர்வாளர்கள் சிலர் கொண்டு சென்றுள்ளனர்.