கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.
நேற்று தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்த நிலையில் இன்று அதிமுக தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்திருந்தனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் பேசுகையில், ''கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்தது ஒரு இருண்ட நிகழ்வு. போதைப் பொருள் புழக்கம் குறித்து இங்குள்ள அதிகாரிகளுக்கு எப்படித் தெரியாமல் உள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை கஞ்சா மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையிலேயே விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கூறுகின்றனர். பெற்றோர் உள்ளிட்டோர் கூறுவதைக் ஏற்காமல் போதைப் பொருள் இல்லை எனக் கூறி வருகின்றனர். சிந்தடிக் போதைப் பொருள்கள் உள்ளதாக பெற்றோர் கூறும் நிலையில் அதிகாரிகளுக்கு இதையெல்லாம் எப்படி தெரியாமல் உள்ளது. போதைப்பொருட்கள் புழக்கம் இருந்தும் இல்லை என அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்றால் அதில் ஏதாவது நோக்கம் இருக்கும்'' என்றார்.