Skip to main content

வங்கிக் கணக்கிற்கு வந்த ரூபாய்; மகிழ்ச்சியில் மகளிர்!

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

kalaignar Women Rights scheme Send Rs.1 and check

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும்  முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் ரூ.1000 பெற உள்ள குடும்ப தலைவிகளுக்கு என பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (11.9.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 15.9.2023 அன்று தொடங்கப்படவுள்ளதையொட்டி அது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி இருந்தார்.

 

kalaignar Women Rights scheme Send Rs.1 and check

 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் ஒரு ரூபாயை அனுப்பிய உடன் பயனாளிகளின் கைப்பேசிக்கு இது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தவறான வங்கி கணக்குகளுக்கு மகளிர் உரிமைத் தொகை செல்லக் கூடாது என்பதற்காக சோதனை அடிப்படையில்  ஒரு ரூபாய் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  அரசின்  இந்த முன் முயற்சியால் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் வரப்பெற்ற பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்