தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிவதால் மின் வயர்கள் அறுந்து விழும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் கோடை மழை பெய்து வரும் நிலையில் நீர் தேங்கிய சுரங்கப்பாதையில் இசைக் கலைஞர்கள் குழுவினர் வாகனத்துடன் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் 'அபிநயா' என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் பார்வையற்ற பாடகர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனத்தில் சென்று பாடல்களைப் பாடி அதன் மூலம் நிதி திரட்டி வாகனத்தில் வருகின்றனர். மொத்தமாக ஐந்து பேர் நாய்க் குட்டி ஒன்றுடன் தங்களுடைய இசைக்குழு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கனமழை பொழிந்துள்ளது. அப்பொழுது சுரங்கப்பாதை வழியாக அவர்களுடைய வாகனம் சென்றுள்ளது. சென்றபோது அந்த வாகனம் எதிர்பாரா விதமாக திடீரென நடுவிலேயே வாகனம் பழுதாகி நின்றது. இடுப்புக்கு மேலாக நீர் இருந்த நிலையில் வாகனம் சிக்கியதால் அவர்கள் வாகனத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த மீட்புப்படையினர் கயிறு மூலமாக இசைக் குழுவில் உள்ளவர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த நாய்க்குட்டி ஆகிய அனைவரையும் மீட்டனர்.