சிதம்பரம் அருகேயுள்ள கடைமடை பகுதிகளான கிள்ளை, குச்சிபாளையம், சிங்காரக் குப்பம், சி.மானம்பாடி பொன்னந்திட்டு ஆகிய கிராமங்கள் மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குச்சிபாளையம், சிங்காரக்குப்பம் ஆகிய கிராமங்களிலும் சாகுபடி செய்து கதிர் வரும் நிலையில் பயிர்கள் உள்ளது. மேலும், இந்தப் பகுதிகளில் ஜனவரியில் பெய்த கடும் மழையால் மணிலா சாகுபடி முற்றிலும் அழிந்து தற்போது மீண்டும் சாகுபடி செய்துள்ளனர்.
கடைமடை பகுதியான இப்பகுதியிலுள்ள 5,00-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்துள்ள நெல்லும் மணிலாவும் அழியும் நிலையில் உள்ளன. எனவே, உடனடியாகக் கான்சாகிபு வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி சிதம்பரம் சார் ஆட்சியர் மற்றும் கொள்ளிடம் வடிகால் நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில், தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பி.கற்பனைச் செல்வம், கிள்ளைப் பகுதி தலைவர் சீனு வெங்கடேசன், அன்பு, ராமதாஸ், வினோபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.