
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பல்வேறு வாதங்கள் மற்றும் முறையீடுகளுக்கு பிறகு அவ்வழக்கின் நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. ஓபிஎஸ் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க இருக்கிறார். அதே நேரம் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்ததற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாளை விசாரிக்க உள்ளனர்.
'அடுத்த கட்ட நகர்வு என்பது அதிமுகவே நாங்கள்தான் என நிரூபிப்பதுதான். ஒன்றரை கோடி தொண்டர்களில் 80 சதவீதம் பேர் ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்குள் எங்களுக்கு ஆதரவு தினந்தோறும் பெருகிக் கொண்டே வருகிறது' என வைத்திலிங்கம் தெரிவித்திருந்த நிலையில் இந்த தீர்ப்பை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.