முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன் உள்பட ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக செப்டம்பர் 11ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்துவைத்திருப்பதாக அறிவிக்க வேண்டும். கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கிற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு, அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஏழு பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளார். எனவே, நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று (29.11.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன், “தமிழக கவர்னரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக உள்ளது. நளினியை விடுதலை செய்ய கவர்னரின் ஒப்புதல் தேவையில்லை. ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை 39 மாதங்களாக நிலுவையில் உள்ளது” என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், “பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது” என்றார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரத்துக்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கூடுதல் பதில் மனுவைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். தன்னை மூன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிசந்திரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் முடிவைப் பார்த்த பிறகே இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதற்கு தமிழ்நாடு அரசு மூன்று வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.