புதுக்கோட்டை மாவட்டத்தில் துப்பறியும் நாய்கள் பிரிவில் ராக்கி என்ற துப்பறியும் நாய் வெடிகுண்டு பிரிவில் பத்தாண்டுகள் பணிபுரிந்து டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றது.
மோப்ப நாய் ராக்கி, பணியில் இருக்கும் பொழுது பிரதமர், முதலமைச்சர், ஆளுநர் என தமிழகம் முழுவதும் விஐபிகளின் நிகழ்ச்சிகளுக்கு சென்று வெடிகுண்டு துப்பறியும் சோதனைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. 13 வயதாகும் ராக்கிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை காலை உயிரிழந்தது.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள துப்பறியும் நாய்கள் பிரிவு அலுவலகத்திற்கு முன்பு ராக்கி உடல் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ராக்கியின் உடலுக்கு போலிசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
துப்பறியும் நாய்கள் பிரிவு அலுவலகத்தில் பராமரிப்பு பணி செய்யும் நாகராஜன் ராக்கியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது. மேலும் மற்ற மோப்ப நாய்களும் ராக்கிக்கு கண்ணீரோடு சல்யூட் வைத்து அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கண்கலங்க செய்தது.