பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தொடர் கைதுகள் நடைபெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரவுடிகள், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் என இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (21-09-24)இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். ரவுடி புதூர் அப்புவை தொடர்ந்து ரவுடி சீசிங் ராஜாவை நேற்று (22-09-24) தாம்பரம் போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். அதன் பின், பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற சீசிங் ராஜாவை, போலீசார் அழைத்துச் சென்ற போது துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்தனர். சென்னையில், காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு, திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா ஆகிய மூன்று பேர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு இணை காவல் ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக ஏற்கெனவே நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் சீசிங் ராஜா மீது பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளது. சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. வேளச்சேரி பார் ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் சீசிங் ராஜாவை தேடி வந்த நிலையில், அவரை ஆந்திராவில் வைத்து கைது செய்தோம். இந்த வழக்கில் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது சீசிங் ராஜா, போலீசாரை நோக்கி சுட்டார். இதனால் தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டதில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்துள்ளார். வழக்கில் கைது செய்தால் குடும்பத்தை விட்டி வீடியோ வெளியிடுவது ட்ரண்டாக உள்ளது. நாங்கள் விசாரிக்கவே கைது செய்தோம். அவர் தாக்கியதால் தான் என்கவுன்டர் சூழல் உருவானது. ” என்று தெரிவித்தார்.