பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்களில் முக்கியமான ஒரு சில அமைச்சர்கள் பதவி வகிக்கும் துறைகளில் இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் தேர்தல் வாக்குறுதி பட்டியல் வெளியிட்டபோது, அதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் ராஜசேகர் பேசியதாவது “விரைவில் அமைச்சர் நேரு இந்த திருச்சியை விட்டு புறப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமலாக்கத் துறையும், வருமானவரித்துறையும் மிக விரைவில் அவரிடம் சோதனை நடத்தும்” என்று கூறினார்.
அவர் இந்தத் தகவலை கூறிய அதே வேளையில் நீர்வள ஆதாரத்துறையின் மூத்த பொறியாளர் பன்னீர் செல்வத்தின் வீட்டில் வருமானவரித்துறையினர் நேற்று காலை முதல் இன்று காலை வரை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் தற்போது வாடகை வீட்டில் தங்கி வரும் நிலையில் இந்த சோதனை இன்று வரை முடிவுக்கு வராமல் தொடர்வது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7மணியில் இருந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையுடன் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற முதல் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அரசு பணிகளை இவர் தான் எல்லா ஒப்பந்ததாரர்களுக்கும் பிரித்து கொடுப்பார். எனவே தான் தேர்தல் பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் இவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் பின்னணியில் யார் இருப்பது என்பது குறித்து நாம் விசாரித்த போது திமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மூலமாகத்தான் இந்த தகவல் வருமான வரித்துறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அதே போல் தான் இன்று அறந்தாங்கியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஸ்ரீ இன்ஃப்ரா டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர்கள் ரவி மற்றும் தியாகராஜனின் திருச்சி வீடு அலுவலகம் தர்மபுரி பெரம்பலூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அமைச்சர் நேருவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய ஒப்பந்ததாரர்கள் வீட்டில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அமைச்சர் எவ.வேலுவுக்கு நெருக்கமாக உள்ள முக்கிய ஒப்பந்ததாரரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.